2018 டெல்லி வாகன கண்காட்சி: விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் நான்கு புதிய கார் மாடல்கள்
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் கார்கள், பைக்குகள், டிரக்குகள், பஸ்கள், புதிய கான்செப்டுகள் என பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தனது வாகனங்களை காட்சிப்படுத்தியது, சில நிறுவனங்கள் புதிய வாகனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வாறு 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடல்களில் விரைவில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் சிறந்த நான்கு மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
4மஹிந்திரா ரெக்ஸ்டன்
மஹிந்திரா நிறுவனம் சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. சாங் யாங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரெக்ஸ்டன் மாடலுக்கும் இதற்கும் எந்த மாற்றமும் இல்லை, அதே மாடல் மஹிந்திரா நிறுவன பேட்சில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டால் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும்.
இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் முறையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலுடன் ஒப்பிடும் போது இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 Bhp திறனும் 420Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் போர்டு எண்டவர் போன்ற பிரீமியம் சுவ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3டொயோட்டா யாரிஸ்
டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மிட்-சைஸ் செடான் மாடலை தற்போது நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தி உள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசூகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டொயோட்டா யாரிஸ் மாடல் கரோலா ஆல்டிஸ் மற்றும் கேம்ரி மாடல்களின் வடிவங்களை அதிகம் பெற்றுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய ஏர் டேம், ஸ்லீக் க்ரில், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய ஹாலோஜென் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின்புற LED விளக்குகள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவையும் உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணம் கலந்த இரட்டை வண்ண டேஷ் போர்டு, 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 காற்றுப்பை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS, நான்கு டிஸ்க் பிரேக், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் எஞ்சின் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. எனினும் இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் தோராயமாக ரூ 10 லட்சம் விலை ஒட்டியதாக வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP
டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் பெர்பார்மன்ஸ் வெர்சனான டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. JTP என்பது Jayem Tata Performance என்பதின் சுருக்கம் ஆகும். டாடா நிறுவனம் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் பெர்பார்மன்ஸ் மாடல்களுக்கென பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்களிலும் சில ஒப்பனை மாற்றங்களும் எஞ்சின் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களில் புதிய இரட்டை வண்ண முன்புற பம்பர், புதிய பனி விளக்கு அமைப்பு, பெரிய ஏர் இன்டேக், சிவப்பு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு நிற மேற்கூரை, புதிய 15 இன்ச் அலாய், புதிய டயர், பானட்டில் வென்ட் மற்றும் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை, தோல் ஸ்டேரிங் கவர், அலுமினியம் பெடல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் அதே 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும், ஆனால் இதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110PS @ 5000rpm திறனையும் 170Nm 1750-4000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் மாடல் 17 kmpl மைலேஜும் தரும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திறன் மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் சிஸ்டமும் இறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1ஹோண்டா அமேஸ்
ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்களை பெற்றுள்ளது.
இந்த மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதி முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. பின்புறம் மட்டும் தான் அதுவும் ஓரளவு தான் முந்தய அமேஸ் மாடலை நினைவுபடுத்துகிறது. இதன் முன்புறம் புதிய அக்கார்டு மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சற்று பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் இந்த மாடல் கண்டிப்பாக மற்ற மாடல்களுக்கு சவாலான போட்டியை கொடுக்கும்.
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 73 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.