2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய சிறந்த எட்டு கார் மாடல்கள்
இந்த வருடம் ஆட்டோமொபைல் துறை சிறப்பான வளர்ச்சியையே பதிவு செய்து வந்துள்ளது. GST மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய சரிவுகள் ஏதும் இல்லை. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைய புதிய மாடல்களும் மேம்படுத்தப்பட்ட மாடல்களும் வெளியிடப்பட்டது. அவற்றில் சிறந்த எட்டு முற்றிலும் புதிய கார் மாடல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இந்த தர வரிசை செயல்திறன், பாதுகாப்பு, வசதிகள், விலை மற்றும் குறிப்பாக கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு என ஏராளமான காரணிகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
8ஹோண்டா WR-V
முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV போன்ற தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் சன் ரூப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் இந்த மாடலில் மட்டுமே சன் ரூப் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மற்றும் டீசல் என்ஜின் மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.5 Kmpl மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 25.5 Kmpl மைலேஜும் தரும்.
இந்த மாடல் ரூ. 7.77 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
7ரெனோ கேப்டர்
இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு பல கஸ்டமைசேஷன் வசதிகளையும் ரெனோ நிறுவனம் வழங்குகிறது. இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space) இட வசதி கொண்டது. இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் 106Bhp திறனையும் மற்றும் 142Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் டீசல் எஞ்சின் 110Bhp திறனையும் மற்றும் 240Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினும் முறையே ஐந்து மற்றும் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படவில்லை. ஆன்னால் கூடிய விரைவில் இந்த வசதிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் 13.87kmpl மைலேஜும் டீசல் மாடல் 20.37kmpl மைலேஜும் தரும் என அரை சான்றளித்துள்ளது.
இந்த மாடல் ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.93 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
6ஸ்கோடா கோடியாக்
முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. உட்புறத்தில் சூப்பர்ப் மாடலின் சில பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அனைத்து விதமான சொகுசு உபகரணங்களும் கொண்ட மாடலாக இது இருக்கும். மேலும் இந்த மாடலில் ஒன்பது காற்றுப்பை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ப்லைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 150Bhp திறனையும் 340Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஏழு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் DSG கியர் பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்னோ என நான்கு வித டிரைவ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் EURO NCAP சிதைவு சோதனையில் ஐந்து ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த மாடல் ரூ. 34.49 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
5மாருதி சுசூகி இக்னிஸ்
இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 26.8 கிலோமீட்டர் மைலேஜும் கொடுக்கும். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்.
இந்த மாடல் ரூ. 4.63 லட்சம் முதல் ரூ. 8.15 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
4டாடா நெக்ஸன்
NEXt-ON என்பதின் சுருக்கமே Nexon என பெயர்க்காரணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது டாடா நிறுவனம். இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, ப்ளூ, சில்வர், க்ரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாடல் ரூ. 5.97 லட்சம் முதல் ரூ. 9.57 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
3டாடா டிகோர்
டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள், LED ஸ்டாப் விளக்கு, 5 - இன்ச் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பெட்ரோல் மாடலில் 15 இன்ச் அலாய் வீல் மற்றும் டீசல் மாடலில் 14 இன்ச் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும்.
இந்த மாடல் ரூ. 4.7 லட்சம் முதல் ரூ. 7.03 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
2ஜீப் காம்பஸ்
தோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. இந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 162Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் என்ஜின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். மற்றும் டீசல் மாடல் மேனுவல் கியர் பாக்சில் மட்டுமே கிடைக்கும். அதேபோல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இத்துடன் ஆட்டோ, ஸ்னோ, சேன்ட் மற்றும் மட் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மாடல் 178mm தரை இடைவெளி கொண்டது. இந்த மாடலில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த மாடலில் ஆறு காற்றுப்பை, ABS, EBD, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏழு இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் ரூ. 15.18 லட்சம் முதல் ரூ. 21.39 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
1டாடா ஹெக்சா
இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது. இந்த மாடலில் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், சூப்பர் டிரைவ் மோட், ஹில் கிளைம்ப் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கிடைக்கும்.
இந்த மாடல் ரூ. 11.77 லட்சம் முதல் ரூ. 17.01 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.